`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?...
Loan: கடனை முன்கூட்டியே அடைப்பது லாபமா? இல்ல இதுக்கு அபராதம் உண்டா?!
கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது காசு கொஞ்சம் கையில் கிடைத்திருக்கிறது. இந்தக் காசை வைத்து கடனை முன்னரே அடைக்கலாமா... கூடாதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
இந்தச் சந்தேகத்திற்கான பதிலைத் தருகிறார் நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்.
"இன்றைய லைஃப் ஸ்டைலில், 'கடன்' என்பது பெரும்பாலும் கட்டாயமானதாக ஆகிவிட்டது. அதனால், கடன் வாங்குவது தவறு என்று கூறிவிட முடியாது. ஆனால், இதை எப்படி அடைக்கிறோம் என்பதில் தான் புத்திசாலிதனம் ஒளிந்திருக்கிறது.
முதலில், கல்விக் கடனை எடுத்துக்கொள்ளலாம்.
15 ஆண்டுகள் வரை கல்விக் கடன் கிடைக்கும். படிக்கும் போதும், படித்து முடித்த ஆறு மாதக் காலம் வரையிலும், வட்டிக் கட்ட தேவையில்லை.
அதன் பிறகு, இ.எம்.ஐ தொடங்கிவிடும்.

படித்து முடித்த உடன், ரூ.20,000 போன்ற அளவில் தான் சம்பளம் கிடைக்கும். அதனால், அதற்கு ஏற்ற மாதிரி தான் இ.எம்.ஐ கட்ட முடியும்.
ஆனால், 4 - 5 ஆண்டுகளுக்குப் பின், சம்பளம் அதிகரித்தப் பின்னும், அதே அளவிலான இ.எம்.ஐ-யைத் தான் கட்டிக் கொண்டிருப்பார்கள்.
இது மிகப்பெரிய தவறு.
எவ்வளவு காலத்திற்குள் கல்விக் கடனைக் கட்டுவது நல்லது?
முடிந்தளவு, கல்விக்கடனை முதல் 5 - 7 ஆண்டுகளில் அடைத்துவிட பார்க்க வேண்டும்.
இல்லையென்றால் ரூ.5 லட்ச கடனுக்கு, வட்டியே ரூ.6 லட்சம் கட்ட வேண்டியதாக இருக்கும்.
அதனால், எவ்வளவு சீக்கிரம் இந்தக் கடனை அடைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கடனை அடைத்துவிடுவது நல்லது.

வெளிநாட்டு கல்விக் கடன்!
வெளிநாட்டிற்கு சென்று படிப்பவர்களும், பெரும்பாலும் கடனை தான் நம்பி இருக்கின்றனர்.
இந்தச் செலவுக்காக ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வாங்குகிறார்கள். இதற்கான வட்டி 12 சதவிகிதம் ஆகும்.
இந்தியாவிலேயே படிக்கும் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 8 - 10 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கே படித்துவிட்டு வந்தால் மட்டும், வேலை கிடைத்துவிடும் என்று கூறிவிட முடியாது. அதனால், நீங்கள் இந்தக் கடனைக் கட்டி முடிப்பதே பெரும்பாடாகிவிடும்.
கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்கும் ஐடியா வைத்திருப்பவர்கள், இது குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும். இந்தக் கடன் மிக ரிஸ்க் ஆனது.
வீட்டுக் கடன் எப்போது அடைக்கலாம்?
வீட்டுக் கடன் வாங்கும்போது, 'இ.எம்.ஐ-யைச் சரியாக கட்ட முடியுமா?' என்கிற கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடனுக்கான காலம் 15 - 20 ஆண்டுகளைத் தாண்டக் கூடாது.
20 ஆண்டுகளுக்கு கடன் எடுத்திருந்தாலும் 10 - 12 ஆண்டுகளுக்குள் நீங்கள் இந்தக் கடனைக் கட்டி முடிப்பது தான் உங்களுக்கு லாபம்.

கடன் எப்படி செயல்படுகிறது?
கடன்களைப் பொறுத்த வரை, இந்த மாதம் உங்களுடைய அசல் தொகை எவ்வளவு பாக்கி இருக்கிறதோ, அதற்கான வட்டி தான் உங்களுக்கு விதிக்கப்படும்.
நீங்கள் ஒவ்வொரு மாதம் கட்டும் இ.எம்.ஐயில் உங்கள் கடனுக்கான வட்டி, அசல் இரண்டுமே கழியும். அப்போது மீதமிருக்கும் அசலுக்குத் தான் வட்டிக் கட்டுவீர்கள்.
இடையில், உங்கள் கையில் மிகப்பெரிய தொகை கிடைத்தால், அதை அப்படியே கடனுக்கு கட்டிவிடுங்கள்.
அப்போது, உங்களுக்கான அசல் தொகை குறைந்துவிடும். மேலும், நீங்கள் கட்ட வேண்டிய கடன் காலமும் குறையும்.
ஆக, எவ்வளவு சீக்கிரம் கடன் கட்டி முடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு லாபம்.
அபராதம் இருக்குமா?
சில வங்கிகள் அல்லது கடன் நிறுவனங்களில், கடன் முன்னரே அடைத்துவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து, நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பே தெரிந்துகொள்ளுங்கள். அப்படியான வங்கி அல்லது கடன் நிறுவனங்களைத் தவிர்ப்பது நல்லது".