வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
சுதந்திரம் வந்தாச்சு... ஆனால், நிதிச் சுதந்திரம் கிடைச்சுடுச்சா? நிதிச் சுதந்திரம் - 1
நம் தாய் நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்து 79-ஆம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரிட்டீஷ்காரர்கள் நம் நாட்டைத் தொடர்ந்து 150 ஆண்டுகளுக்குமேல் கொள்ளை அடித்ததன் விளைவாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது.
ஆனால், கடந்த 78 ஆண்டுகளில் நம் நாடு பொருளாதார வளர்ச்சி அடையவும், பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் காணவும் இந்திய அரசாங்கம் தொடர்ந்து எடுத்த பல விதமான முயற்சியின் பலனாக இன்றைக்கு உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடுகளில் நம் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது.
ஏறக்குறைய 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற அளவில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த 20 ஆண்டு காலத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியான நிலையில் நம் நாடு இருக்கும் என்பதை நினைத்து, இந்த 78-ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளில் நாம் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இப்படி இருக்க, நம் நாட்டின் தனிமனிதர்கள் நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்டார்களா என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் இன்னும் நிதிச் சுதந்திரம் அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

1. வருமானம் பெருகவேண்டும்…
உலக அளவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் தொகை டாலர் கணக்கில் பார்த்தால், மிகவும் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, உலக நாடுகளில் மக்கள் ஆண்டுதோறும் சம்பாதிக்கும் தொகையை டாலர் கணக்கில் பார்ப்போம்…
1. அமெரிக்கா - 89,000 டாலருக்கு மேல்
2. ஆஸ்திரேலியா - 64,000 டாலருக்கு மேல்
3. ஜப்பான் - 33,000 டாலருக்கு மேல்
4. சிங்கப்பூர் - 92,000 டாலருக்கு மேல்
5. தைவான் - 34,000 டாலருக்கு மேல்
ஆனால், இந்தியாவின் ஆண்டுதோறுமான வருமானம் வெறும் 2,880 அமெரிக்க டாலர் மட்டுமே. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டு மக்களின் வருமானம் இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2. விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை….

நம் மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்து வருகிறது என்றாலும், இந்த வருமானத்தைப் பணவீக்கத்தைத் தாண்டி வளர்ச்சி காணும் வகையில் நம் நாட்டு மக்கள் முதலீடு செய்கிறார்களா என்றால், இல்லை. பொதுவாக, நம் நாட்டு மக்கள் ரிஸ்க் எடுக்க மிகவும் பயப்படுவார்கள்.
நாம் சேர்த்துவைத்த பணம் பத்திரமாக இருந்தால் போதும், பணவீக்கம் அளவுக்கே வருமானம் கிடைத்தால் போதும் என்றே நினைப்பார்கள். இதனால் வங்கி எஃப்.டி. மீது நம் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிகப் பெரிதாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் ஆகியிருக்கும் பணம் மட்டுமே 250 லட்சம் கோடி ரூபாய். இந்த முதலீட்டுக்கு மக்களுக்குக் கிடைக்கும் வருமானம் வெறும் 6.5% - 7% மட்டுமே. இதே போல, தபால் அலுவலகங்களில் செய்யப்பட்ட டெபாசிட் மட்டுமே 62,500 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது போக, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனத்திலும் மக்களின் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது.
இந்த மூன்று நிறுவனங்களிலும் பணத்தைப் போட்டு வைப்பது பாதுகாப்பானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானமானது எதிர்காலத்தில் நம் பணத்தின் மதிப்பை எந்த அளவுக்குப் பெருக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி.
பணவீக்கத்தைவிட அதிக வருமானம் எதில் கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமலே இருக்கிறது. பாதுகாப்பு என்கிற ஒற்றை அம்சத்தில் மக்களின் கவனம் அதிகமாகக் குவிந்திருப்பதால், பணத்தின் மதிப்பு அதிகரிக்காமலே இருக்கிறது. ஆனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, பணவீக்கத்தைவிட அதிக வருமானத்தை அவர்கள் ஈட்டத் தொடங்கினால், அவர்கள் நிதிச் சுதந்திரம் அடைவது உறுதி.

3. நிதி நிர்வாகக் கல்வி வேண்டும்…
நம் கல்வித் திட்டத்தில் இன்னும் கவனிக்கப்படாத ஓர் அம்சமாக இருக்கிறது நிதி நிர்வாகக் கல்வி. நம் ஈட்டும் பணத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குச் சொல்லித் தருவதில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இன்னும் தீவிரமான அக்கறை காட்ட வேண்டும்.
இன்றைக்குப் பலரும் போதிய அளவில் பணம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், நிதி நிர்வாகக் கல்வி இல்லாததால்தான். வட்டி என்றால் என்ன, அதை எந்த அளவுக்கு வாங்க வேண்டும் என்கிற அடிப்படை புரிதல் இல்லாமலே கடன் வாங்குகிறார்கள். அசலைவிட அதிகமாக வட்டி கட்டுகிறார்கள். இதனால் அவர்கள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறது.
நம் மக்களுக்கு முதலீடு என்றால் நிலம் வாங்குவது, தங்கம் வாங்குவது என்றுதான் இருக்கிறார்கள். ஆனால், இதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதற்கான தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லவே இல்லை.

நிதிச் சுதந்திரம் வேண்டும்…
ஆக, நம் நாடு சுதந்திரத் திருநாளைக் கொண்டாடும் இந்தச் சமயத்தில், தனிமனிதர்களின் நிதிச் சுதந்திரம் பற்றி நாம் இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்கிற அதே சமயத்தில், தனிமனிதர்களின் பொருளாதார நிலையும் உயர வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்திய நாட்டு மக்களான நாம் தனிப்பட்ட வகையில் நிதிச் சுதந்திரம் அடைய வேண்டும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் இந்தக் கட்டுரைத் தொடரை நீங்கள் தினந்தோறும் படிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவதற்கு நிறைவே வாய்ப்பு இருக்கிறது.
இந்தக் கட்டுரைத் தொடரைத் தினந்தோறும் படியுங்கள். உங்கள் கேள்விகளையும், கருத்துகளையும், அனுபவங்களையும் ask@labham.money என்கிற மின் அஞ்சல் முகவரி அனுப்பலாம். உங்கள் கருத்துகள், அனுபவங்கள், கேள்விகள் எல்லோருக்கும் பயன்படும்!
லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திட: https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
நீங்களும் நிதிச் சுதந்திரம் பெற வேண்டுமா? 'லாபம்' மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டைத் துவங்க, க்ளிக் பண்ணுங்க: https://wa.me/919600296001?text=நிதி%20சுதந்திரம்
கால்: 9600296001 | வெப்சைட்: https://labham.money/
'லாபம்' - AMFI அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம். ARN -310095 | மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீட்டைத் துவங்கும் முன், திட்ட ஆவணங்களை சரிபார்க்கவும்.
(நிதிச் சுதந்திரம் அடைவோம்)