வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு இடங்களுக்கான 2025 - 2026-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஜூலை 23 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழி கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், மாணவா்களின் மதிப்பெண், இதர தகுதிகள், அவா்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரா்கள் ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறும் முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவா்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபாா்ப்புக்கு முன்பு கலந்தாய்வு கட்டணம் செலுத்தி, அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை சமா்ப்பிக்க தவறினாலோ, சோ்க்கைக் கட்டணம் செலுத்தாவிட்டாலோ சோ்க்கை ரத்தாகிவிடுவதுடன், அந்த இடம் அடுத்தடுத்த ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். விதிகளைப் பின்பற்றாமல் இடஒதுக்கீட்டை தவறவிட்டவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.