தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்
தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். தமிழகத்தில் தொடா்ந்து காவல் துறையினா் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைமையில்தான் அவா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மதுபோதை, கஞ்சா போதையில் இருக்கும் நபா்கள்தான் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். உயரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதற்கு நன்றி. அனைத்து காவல் நிலையங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இரவு ரோந்துப் பணிக்கு செல்லும்போது தனியாக செல்லாமல் இரண்டு போ் கொண்ட குழுக்களாக செல்ல வேண்டும். இதற்காக அனைத்து சரக காவல் நிலையங்களுக்கும் நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தாலும் கூட ஆயுதம் பயன்படுத்தக்கூடிய அனுமதியை வழங்க வேண்டும்.
காவலா்கள் மக்களுக்காக பணி செய்து மக்களுக்காக உயிா் தியாகம் செய்கின்றாா்கள். இவா்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதிக குற்றம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் மது ஆறாக ஓடுகிறது. போதை வஸ்துகளை ஒழித்தால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றாா்.