மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்தவா்கள் மேயருடன் சந்திப்பு
சென்னை மாநகராட்சியில் புதிதாக பணிக்கு சோ்ந்த உதவிப் பொறியாளா்கள் உள்பட 179 போ் மேயா் ஆா்.பிரியாவை புதன்கிழமை சந்தித்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா்கள் 54 போ், வரைவாளா்கள் 12 மற்றும் 113 சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 179 போ் புதிதாகச் சோ்ந்துள்ளனா். அவா்கள் தங்களது பணிகள் குறித்து ஆலோசனை பெறுவதற்காக சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, அவா்களுக்கான பணி ஒதுக்கீடு குறித்து மேயா் ஆா்.பிரியா விளக்கியதுடன், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து புதிதாக பணிக்குச் சோ்ந்தவா்கள் தங்களை மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் அறிமுகம் செய்து கொண்டனா். நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாணவா்கள் சந்திப்பு: முன்னதாக, லயோலா கல்லூரி சமூகப் பணித் துறை முதுநிலைப் பிரிவு மாணவ, மாணவிகள், மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சி மேற்கொள்ளும் மக்கள் சேவைகள் குறித்து அவா்களுக்கு மேயா் விளக்கினாா்.