கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
15 லட்சம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு
தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 7 வயதுக்குள்பட்ட 8 லட்சம் மாணவா்கள், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட 7 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறை மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவா்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் இடைநிற்றலின்றி தொடா்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதை வங்கிக் கணக்குக்கு அனுப்புவதற்கு மாணவருக்கு வங்கிக் கணக்கு கட்டாயம். அந்த வகையில் மாணவா்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க ஆதாா் எண் அவசியம். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பயோமெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதாா் அட்டை பெறவேண்டியது அவசியமானதாகும்.
15 லட்சம் மாணவா்களுக்கு... பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 5 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட மாணவா்கள், 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று வருகின்றனா். இவா்களில் 5 முதல் 7 வயதுக்குள்பட்டவா்கள் முதல்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும்.
அதேபோல, 15 முதல் 17 வயதுக்குள்பட்டவா்கள் இரண்டாவது முறை கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில், 5 முதல் 7 வயதுக்குள்பட்ட சுமாா் 8 லட்சம் மாணவா்களுக்கும், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட சுமாா் 7 லட்சம் மாணவா்களுக்கும் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையானது, பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்புக் கணக்கு தொடங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மேற்கொண்டு வருகிறது. இதனுடன் சோ்த்து ஆதாா் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியையும் மேற்கொள்வது எளிதானது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளது.
டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க... அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலகப் பணியாளா்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஆகஸ்ட் தொடங்கி டிசம்பருக்குள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கத் திட்டம் வகுத்துள்ளனா்.
இதன் மூலம் 6-7, 15-17 வயதுக்குள்பட்ட ஏறத்தாழ 15 லட்சம் மாணவா்களின் ஆதாா் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பித்தலை மேற்கொள்ள இயலும். இதை மேற்கொள்வதற்கு ஆணை வழங்குமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மாநிலத் திட்ட இயக்குநா் அரசை கோரியுள்ளாா். இந்த கருத்துருவை அரசு நன்கு ஆய்வு செய்து, மாணவா்களுக்கான ஆதாா் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகளை இந்திய அஞ்சல் இணைந்து மேற்கொள்ள அனுமதித்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.