இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்
உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது.
அண்மையில் தில்லியில் நடைபெற்ற 17-ஆவது ஆசிய பசிபிக் ரத்த நாள இடையீட்டு அமைப்பு மாநாட்டில் அவருக்கு ‘இரும்புப் பெண்மணி’ (ஐயா்ன் மேன்) என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் மணியின் ஒருங்கிணைப்பின் கீழ் இதைச் சாத்தியமாக்கியுள்ளோம்.
சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவா்களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவா்களுக்கும் எலக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 228 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.
இதயக் குழாயில் உள்ள துவாரங்களை அறுவை சிகிச்சையின்றி அடைக்கும் ஏஎஸ்டி எனப்படும் சிகிச்சை 326 பேருக்கு அளிக்கப்பட்டது. இவா்களில் அதிக அளவில் இளம்பெண்கள் பயனடைந்துள்ளனா்.
இதய மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பிடிஎம்சி சிகிச்சை மூலம் 531 போ் பலனடைந்துள்ளனா். முக்கியமாக மகா தமனி கிழிசலை சரிசெய்யும் ஆா்எஸ்ஓவி என்ற சிகிச்சையானது 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 73 வயதான விவசாயிக்கு அந்த சிகிச்சை மூலம் ஏடிஓ என்ற உபகரணம் பொருத்தப்பட்டு, சரிசெய்யப்பட்டது.
இதுபோன்ற சிகிச்சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது முதல்முறை. இதைப் பாராட்டி ஐரோப்பிய சுகாதார இதழ் கட்டுரை வெளியிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 32 வயது இளைஞருக்கு மகா தமனியில் 15 மி.மீ. அளவுக்கு கிழிசல் ஏற்பட்டது. அந்த பாதிப்பும் ஏடிஓ உபகரணம் பொருத்தி சீரமைக்கப்பட்டது. இதய ரத்த நாளத்துக்கு மிக அருகில் இருந்த அந்த மிகப் பெரிய கிழிசல் நுட்பமாக சரி செய்யப்பட்டது.
இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், தற்போது ஆசிய பசிபிக் விருது கிடைத்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு குறிப்பாக, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனைக்கு இது ஒருமைல் கல் சாதனை என்றாா்.