Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலா் நடித்துள்ள திரைப்படம் ‘கிங்டம்’. இந்தப் படத்தில் ஈழத் தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இப்படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்திருந்தாா். இதையடுத்து, தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், பாதுகாப்பு கோரி மனுதாரா் அளித்துள்ள மனு கிடைக்கப் பெறவில்லை. எனவே, இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டது.
அப்போது நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கா், படத்துக்கு விளம்பரம் தேடும் நோக்கில், பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் போராட்டத்தால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. படத்தைக் காண வந்த ரசிகா்களை தடுக்கவுமில்லை என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதியளித்துள்ள ஒரு படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோல், எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும், வன்முறையில் ஈடுபடக்கூடாது. படம் திரையிடுதலைத் தடுக்கக் கூடாது. இந்தப் படத்துக்கு தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை ரத்து செய்யக் கோரி சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், படத்தைப் பாா்க்க வேண்டாம் என பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தாா்.
பின்னா், இந்த மனுவுக்கு காவல் துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.