கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின் எலும்புக்கூடு போன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்ற வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, யானையின் எலும்புக்கூடு தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

வனத்துறையின் உயர் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறையினர், தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் எலும்புக்கூடு என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் யானையின் தந்ததங்கள் இரண்டும் காணாமல் போனதையும் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், " கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடமாடி வந்த 40 வயதான ஆண் யானை ஒன்று இங்குள்ள தனியார் பட்டா நிலத்தில் உயிரிழந்திருக்கிறது. சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் யானை இறப்பு குறித்து வனத்துறைக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. உடல் பாகங்கள் சிதைவுற்ற நிலையில் எலும்புக்கூடுகள் மட்டுமே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யானையின் மண்டை ஓட்டில் இருந்து இரண்டு தந்தங்களை மர்ம நபர்கள் உருவி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த தனியார் நிலத்தை பராமரித்து வந்த கேர்டேக்கர் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" என்றனர்.