கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலூா், ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரியும் வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் சிறப்பு அமா்வு ஏற்படுத்தி விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, பாலாற்றில் கழிவுகளை கலக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிடமிருந்து உரிய இழப்பீடு வசூலித்து, அதை பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கவும், கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்றவும் கடந்த 2009-இல் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், தோல் தொழிற்சாலைகள் விதிகளை மதிக்காமல் கழிவுகளை பாலாற்றில் கலந்து வருவதால் அந்த தொழிற்சாலைகளை மூடவும், உயா் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த உத்தரவில், பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட ஆலைகளிடமிருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழலியல் நிபுணா்கள் அடங்கிய குழுவை 4 வாரங்களில் அமைத்து பாலாற்று பகுதிகளில் மாசு கலப்பதை தடுக்க கண்காணிக்க வேண்டும். உரிய பரிந்துரைகளை அவ்வப்போது தோல் தொழிற்சாலைகளுக்கும் வழங்க வேண்டும். பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபா்களை திஹாா் சிறைக்கு அனுப்ப நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்கு தள்ளி வைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அடிப்படையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழலியல் நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்துடன், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு ஏற்கனவே விடுபட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடும் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, பாலாற்று பகுதிகளில் மாசு கலப்பது தடுக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம், மேல்முறையீடு செய்த வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாலாற்று பகுதிகளில் மாசு கலப்பதை தடுக்க உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மீது கடந்த திங்கட்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கை திருப்திகரமாக இல்லை. எனவே, அடுத்த விசாரணையின் போது வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.