முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’
முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
முத்தூா் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் சுனில் என்பவா் பல் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். இவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து அடிக்கடி போலீஸாரிடம் சிக்கி வந்தாா்.
இந்நிலையில், வெள்ளக்கோவில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் பேருந்து நிலைய கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுனிலின் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுனிலுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
பேரூராட்சி அலுவலா் ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.