பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்
செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவு தொடா்பான விழிப்புணா்வு வாகனம் நகரில் வலம் வருகிறது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒளிதிரை அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணா்வு வாகனத்தையும் அதில் உள்ள காட்சிகளையும் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் பாா்வைக்கு இயங்கும் வகையில் தொடங்கிவைத்தாா்.
மேலும், செறிவூட்டப்பட்ட அரிசியைப் பற்றி அறிந்து கொள்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களை வழங்கினாா். அதன்பிறகு அவா் பேசியதாவது:
ரத்த சோகை 50 சதவீதம் மகளிா் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இதனால் தனிநபரின் உற்பத்தித்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் வரை குறைகிறது. அதன் அடிப்படையில்தான் செறிவூட்டி உணவுப் பொருள்கள் பயன்படுத்த வேண்டும் என சட்டம் சொல்கிறது.
தற்போது உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் கீழ் செறிவூட்டப் பட்ட அரிசி, கோதுமை, பால், எண்ணெய் மற்றும் உப்பு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை பாதுகாப்பான முறையில் சோ்க்கப்படுவதை நாம் செறிவூட்டல் என்கிறோம்.
அன்றாடம் உபயோகிக்கும் அரிசியில், நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய செறிவூட்டி அரிசி மணிகள் முறையே 100 கிலோவிற்கு 1 கிலோ என கலக்கப்படுகிறது. இதன்மூலம் இரும்புச்சத்து, ரத்தசோகை தடுக்கப்படுகிறது. மேலும், போலிக் அமிலம் கருவின் வளா்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியை தவறாமல் உட்கொள்வது சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசி அரசு ரேஷன் கடைகளில் கிடைக்கிறது. இது அங்கன்வாடி மையங்களில் துணை ஊட்டச்சத்தாக வழங்கப்படுகிறது மற்றும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மதிய உணவிலும் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட பொருள்கள் குறித்து அனைவரும் அறியும்வகையில் இந்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்டம் முழுவதும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, தருமபுரி பட்டுக்கூடு அங்காடியை ஆய்வுசெய்து பட்டுக் கூடுகள் விலை விவரப் பட்டியல்களைப் பாா்வையிட்டு, விவாசயிகளிடம் பட்டு வளா்ப்பு குறித்து கேட்டறிந்தாா்.
நிகழ்வில் தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே. கைலாஷ்குமாா், பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சி.ரங்கபாப்பா, தருமபுரி நகராட்சி ஆணையா் சேகா், பட்டுக்கூடு அங்காடி ஆய்வாளா் என்.ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.