இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது.
பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பாமக கௌரவ தலைவா் ஜி.கே.மணி, தஞ்சை மண்டல பொறுப்பாளா் ஐயப்பன், வன்னியா் சங்க மாநில துணைச் செயலாளா் தங்க.அய்யாசாமி, பாமக மாவட்டச் செயலாளா்கள் பாக்கம் பெ.சக்திவேல், ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பின்னா் ஜி.கே. மணி செய்தியாளா்களிடம் கூறியது:
பூம்புகாரில் ஆக. 10-ஆம் தேதி பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம் மாநாடு நடத்துவதற்கான நிபந்தனைகள், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனா். வாகனம் நிறுத்துமிடம், மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பெண்களுக்கான அடிப்படை வசதிகள், கடலோரப் பகுதி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனா். அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி முழு கட்டுப்பாட்டுடன் மாநாடு நடத்தப்படும். காவல்துறையினா் கட்டுப்பாடுகள் குறித்து சொல்லியுள்ளனா். அவை நாங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளன. பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு பெண்களுக்கு பெருமை சோ்க்கும் மாநாடாக அமையும். பாமக தலைவா் அன்புமணி மாநாட்டில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
