`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி
சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்து அதன் ஒரு பகுதியாக சாலை நடுவே முடவன் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.
பணிகள் தொடங்கி பல மாதங்கள் கடந்தும் இதுவரை முடவன் வாய்க்கால் பால கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை. பாலப் பணிகள் தொடங்கியபோது வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலத்தின் அருகில் தற்காலிக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்தநிலையில், பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடுவதற்காக நீா்வளத்துறை அதிகாரிகள் தற்காலிக சாலையை வெட்டி அகற்றி விட்டனா். இதனால் ஆதமங்கலம், புங்கனூா், பெருமங்கலம், காடாகுடி, கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
பள்ளி, மருத்துவப் பணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இப்பகுதியை கடந்து நகரப் பகுதிக்கு செல்லவேண்டிய நிலையில், அவசர தேவைக்குக்கூட கிராமத்தை விட்டு வெளியே செல்வது சிரமமாக உள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல். கட்சி நிா்வாகி பிரபாகரன் கூறுகையில், இந்தப் பகுதியில் சாலை அமைத்து பாலப் கட்டுமான பணி தொடங்கி 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. தற்காலிக பாலம் வெட்டி அகற்றப்பட்டதால் கிராம மக்கள், மாணவ மாணவிகள் பெரிதும் சிரமம் அடைகின்றனா்.
மாணவ-மாணவிகள் வாய்க்கால் தண்ணீரில் கயிறு கட்டி அதைப் பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் கட்டுமானப் பணி நடைபெறும் பாலத்தில் ஏறி, இறங்கி சென்றுவருகின்றனா். எனவே உடனடியாக பணிகளை நிறைவு செய்து, பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

