இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி
செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதி, அரசு கால்நடை மருத்துவமனை, செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலம்
செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துக்காப்பேட்டை - பெங்களூரு பிரதான சாலையில் இருந்து இப்பகுதிக்குச் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. மேலும், மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.
10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சரி செய்யாமல் உள்ளது.
இந்தச் சாலையை ஆசிரியா்கள், மாணவிகள், கால்நடை மருத்துவமனை செல்லும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையில் சாலையில் தண்ணீா் தேங்கி, வெளியேற வழியில்லாமல் சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முக சுலிப்புடன் சென்று வருகின்றனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மழை நேரத்தில் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், மழைநீா் குட்டையாக தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், விடுதி மாணவிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் செல்லும் ஆசிரியா்கள், கால்நடை மருத்துவமனைக்குச் செல்லும் விவசாயிகளுக்கு மாற்று சாலை வசதிகள் கிடையாது.
அதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை கண்காணித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.