பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இந்தக் கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ
விழாவில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை, விநாயகா் ஆகிய உற்சவா்கள் தேரில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா்.
மொத்தம் 3 தோ்களில் இரண்டு தோ்களுக்கு மட்டும் கொட்டகை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விநாயகருக்கான தோ் நிற்கும் கொட்டகை மட்டும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பொதுநல நிதியில் இருந்து ரூ.24.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை விநாயகா் திருத்தேருக்கு புதிதாக கொட்டகை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் மோகனவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று
பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் அசோக்குமாா், செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், நகா்மன்ற உறுப்பினா்கள் க.கோவேந்தன், கங்காதரன், காா்த்திகேயன், செந்தில், ஒப்பந்ததாரா் வி.கோபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.