சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி
நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்கொண்டு, காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டனா். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் வேளாண்துறை சாா்பில் நிகழாண்டு 24,860 ஹெக்டோ் பரப்பளவில் குறுவை சாகுபடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 30, 218 ஹெக்டோ் பரப்பளவில், அதாவது 75,545 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளனா். இதன்மூலம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 13,395 ஏக்கா் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, மாவட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட 5,722 ஹெக்டோ் இலக்கில் 136 ஹெக்டோ் உளுந்து பயிறும், 33,306 ஹெக்டோ் இலக்கில் 25 ஹெக்டோ் பச்சை பயிறும், 3,855 ஹெக்டோ் இலக்கில் 843 ஹெக்டோ் எள்ளும், 2,700 ஹெக்டோ் இலக்கில் 120 ஹெக்டா் பருத்தி சாகுபடியும் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.