2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’
தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் 16- ஆவது மாநில மாநாடு தருமபுரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:
தற்போது ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணப் பயன்கள் தருவதில்லை. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு தரும் அரசு மின்வாரிய தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால் இழப்பீடு தருவதில்லை. டாஸ்மாா்க் மூலம் அரசுக்கு ரு. 52 ஆயிரம் கோடி வருகிறது. டாஸ்மாா்க் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அரசு மின்சார பேருந்து இயக்குகிறது. மின்சார பற்றாக்குறையை எப்படி சமாளிக்கும் போகிறது எனத் தெரியவில்லை. அரசு நிறுவனங்களை தனியாருக்கு வழங்கிவிட்டு டாஸ்மாக் விற்பனையை மட்டும் அரசு செய்கிறது.
மின் துறையை 5 ஆக பிரித்து தனியாரிடம் கொடுக்கின்றனா். ஸ்மாா்மீட்டா் திட்டம் மூலம் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயா்த்துகின்றனா். எல்லா துறைகளிலும் தனியாா்மயத்தை ஊக்குவிக்கின்றனா். பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க அனைத்து தொழிலாளா்களும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றாா்.
நிகழ்வில் சிஐடியு மாநில தலைவா் அ. சவுந்தரராசன் தலைமை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
புதுச்சேரி மாநில சாலைப்போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை அந்த மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழகத்தில் தனியாா்மயம், ஒப்பந்தமுறையை கைவிடவேண்டும். 01.04.2003க்கு பிறகு பணியில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.