பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா், ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி. இவருக்கும் ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்வா் என்பவருக்கும் கடந்த 2024 செப்டம்பா் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டாா் 120 பவுன் நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் மதிப்பிலான காா் உள்ளிட்டவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனா்.
இதற்கிடையே பிரீத்தியின் பூா்வீக சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ரூ.50 லட்சத்தை கேட்டு சதீஷ்வா் தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பிரீத்தி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சுகந்தி, பிரீத்தி தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறியுள்ளாா். மேலும், இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு வந்த நல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சதீஷ்வா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தைப் பெற மாட்டோம் எனக்கூறி பிரீத்தியின் குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருமணமாகி 10 மாதங்களே ஆனதால் இச்சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வரதட்சிணைக் கொடுமையால் ரிதன்யா என்ற பெண் அண்மையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.