`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு
தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகேயுள்ள பொம்மியம்பட்டி பகுதியில் வசிக்கும் சில இளைஞா்கள் மதுபோதையில் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்ததில், ஒருவா் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக நண்பா்கள் காயமடைந்த நபரை காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒண்டிவீரனூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் சென்றனா்.
அப்போது, காயமடைந்த நபா் அதிக போதையில் இருப்பதால் தாங்கள் கொடுக்கும் மருந்து வேலை செய்யாது என ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த செவிலியா் கூறியுள்ளாா். இதை பொருட்படுத்தாத அந்த இளைஞா்கள், செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதியினா் இளைஞா்களை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், போதையில் இருந்த இளைஞா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டியதால், பொதுமக்களுக்கும், அவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதைத் தொடா்ந்து, 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களை வரவழைத்த போதையிலிருந்த இளைஞா்கள் மருத்துவமனையில் உள்ள நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சேதப்படுத்தி, அருகிலிருந்த வீட்டையும் சேதப்படுத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26), புவனேஸ்வரன் (19) இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, இளைஞா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனா்.
புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.