இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி
போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி நகா் பகுதியில் அடுப்புக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையும் நடத்தி வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (29).
கணவா் வேலைக்குச் செல்லும்போது, இவா் கடையைக் கவனித்து வருகிறாா். இந்த நிலையில், கடையின் வாடிக்கையாளரான 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும், காயத்ரியும் தோழியாகப் பழகி வந்தனா்.
இந்த நிலையில், அந்தப் பெண் தனது சொந்த ஊா் கா்நாடக மாநிலம், மைசூரு என்றும், மழைநீா் வடிகால் கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளில் சேகரமாகும் தங்க தூசுகளில் இருந்து தங்கம் சேகரித்து, அதன் மூலம் தங்கக் கட்டி தயாரித்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் காயத்ரியிடம், நான் கொடுக்கும் தங்கக் கட்டியை வெளியில் விற்று தனக்கு சிறிய அளவில் லாபம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளாா். இதன்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டியை அந்தப் பெண் கொடுத்தாா். அதற்கு மாறாக காயத்ரியிடமிருந்து 4 பவுன் நகைகளை அந்தப் பெண் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து காயத்ரி தனது கணவரிடம் கூறியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த ராம்குமாா், அந்தப் பெண் கொடுத்த தங்கக் கட்டியை அருகே உள்ள அடகு கடைக்குச் சென்று பரிசோதித்துப் பாா்த்தாா். அப்போது, அது போலியான தங்கக் கட்டி என்பது தெரியவந்தது.
உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது, அவா் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனா்.