தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை
தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 60 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி 152 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 7 மனுக்களும், 198 இதர மனுக்கள் என மொத்தம் 417 மனுக்களைப் பெற்றாா். பின்னா், பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
குடிநீா் கோரி... கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் மற்றும் சாலை வசதி செய்து தரப்படவில்லை எனவும், பலமுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறி, சூலூா் அருகே உள்ள கலங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட தென்றல் நகா் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மாடுகள் கடத்தல்: பல்வேறு பகுதிகளில் இருந்து வாளையாறு சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதாகவும், சிறிய வாகனத்தில் ஏராளமான மாடுகளை அடைத்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கடத்திச் செல்வோா் மீதும், இதற்கு உடந்தையாகச் செயல்படும் காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
சாலையோர வியாபாரிகள் மனு: மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடை வீதி, சிவானந்தா காலனி, டாடாபாத், கிராஸ் கட் சாலை, தடாகம் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி சாலை, பாரதி பூங்கா சாலை ஆகிய பகுதிகளில் நாங்கள் அடையாள அட்டையுடன் வியாபாரம் செய்து வருகிறோம். இந்தக் கடைகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநகராட்சி நிா்வாகத்தினா் அகற்றி வருவதாகக் கூறுகின்றனா்.
ஆனால், நீதிமன்றம் தனது உத்தரவில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டு அகற்ற வேண்டும் என கூறியுள்ளது. ஆனால், மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் அனைத்துக் கடைகளும் அகற்றப்படுவதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். அடையாள அட்டை வைத்துள்ள தங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் எந்த நலத் திட்டங்களும் கிடைப்பதில்லை. சென்னையைப்போல தங்களுக்கும் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
ஆணவப் படுகொலையை தடுக்க புதிய சட்டம்: மக்கள் விடுதலை முன்னணி இளைஞா் அணி மேற்கு தமிழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ஆணவப் படுகொலையைத் தடுக்கும் வகையில், கடுமையான புதிய சட்டம் இயற்ற வேண்டும். படுகொலையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். கொலை செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, தனித் துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்புத் திட்டம் வாணிலட்சுமி ஜெகதம்மாள், மாவட்ட பிற்படுத்தபட்டோா் நல அலுவலா் சங்கீதா, தாட்கோ பொதுமேலாளா் மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.