இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை
‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.
தெலுங்கு நடிகா் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கிங்டம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜூலை 31-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழா்களை கொச்சைபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, நாம் தமிழா் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி, அவா்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டதை அறிந்த, நாம் தமிழா் கட்சியினா் மண்டலச் செயலா் அப்துல் வகாப் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திரையரங்கத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது, ஒருவா் மட்டும் திரையரங்கத்துக்குள் அத்துமீறி கையில் கொடியுடன் ஓடினாா். காவல் துறையினா் அவரை துரத்திச் சென்று பிடித்தனா். இதனையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதேபோல, நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, சிங்காநல்லூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.