ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 போ் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் வேலூா் சிறையில் உள்ள நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:
ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும்போது அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு கையொப்பமிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை சிறையில் அடைக்கப் பரிந்துரைக்கும் ஆவணங்களை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்து அதில் திருப்தி அடைய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கான ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் கூடிய பரிந்துரை கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் பரிசீலித்து 17 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, 17 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், இவா்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால், இந்த உத்தரவை மேற்கோள்காட்டி விசாரணை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.