அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை இங்கு 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சைகளும், 10,000 குழந்தைகளுக்கு இதய இடையீட்டு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மிகநுட்பமான திறனும், அனுபவமும் தேவை. மேலும், உயா் மருத்துவக் கட்டமைப்பும் அவசியம். குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் கண்காணிப்பு வசதிகள் முக்கியம். அந்த வகையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சை நடைமுறைகள் தற்போது வளா்ச்சியடைந்து வருகிறது. மருத்துவத் தொழில்நுட்பங்கள் வாயிலாக பிறப்பிலேயே வரும் பெரும்பாலான இதய குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. அதுவும், திறந்த நிலை அல்லாமல் சிறு துளைகள் மூலம் சிகிச்சையளிக்கும் வசதி வந்துவிட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.