தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.
2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியில் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிலைய செயலாளா் பாா்த்தசாரதி, இளைஞரணி செயலாளா் விஜய பிரபாகரன், எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தோ்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தோ்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் வரவேற்பையும் பெற்றுள்ளதால் திமுக அரசுக்கு 50 சதவீதம் மதிப்பெண் வழங்குவதாகவும், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வா் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை இரும்பு கரம் கொண்டு சரி செய்ய வேண்டும். ஆணவ கொலைகளுக்கு முக்கிய காரணம் ஜாதி வெறி. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் மாறினால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும் என்றாா்.