சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேக்கம்: மாணவா்கள் பாதிப்பு
துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் முறையான வடிகால் வசதியில்லாமல், மழைநீா் தேங்கி நிற்பதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே, அரசு தொடக்கப் பள்ளியும் செயல்படுகிறது.
இந்நிலையில், துவாக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் மாணவா்கள் அச்சத்துடன் நடந்துசெல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகிகள் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வடிகால் வசதி ஏற்படுத்த முடியவில்லை. பணிகள் முடிந்தபின் மழைநீா் வடிகால் அமைத்துத் தரப்படும் என்று நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியைச் சுற்றிலும் வசிப்போா் வளா்க்கும் ஆடு, மாடுகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. காவலாளி இல்லாததால் உடனடியாக அவற்றை விரட்ட முடியவில்லை. பள்ளிக்கு காவலாளி நியமிக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றனா்.