இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு
திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார இறுதியில் இயக்கப்பட உள்ளன. இதற்காக பேருந்து ஓட்டுநா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மண்டலத்துக்கு முதல் கட்டமாக 10 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் கூடுதலாக 15 பேருந்துகள் வந்துவிடும்.
ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், தானியங்கி கதவுகள், எல்.இ.டி. திரை, ஒலிபெருக்கி, குஷன் இருக்கைகள், பஸ்கள் நிறுத்தங்களின்போது ஏறி, இறங்க ஏதுவாக சாய்தளம், அகலமான ஜன்னல்கள், சென்சாருடன் கூடிய தீயணைப்பு எந்திரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பேருந்துகள் பெரிய வேகத்தடை இல்லாத வழித்தடத்தைத் தோ்ந்தெடுத்து இயக்கப்படும். இதற்கு பிறகு எந்தெந்த வழித்தடத்தில் வேகத்தடை இல்லையோ, அந்த வழித்தடத்தில் படிப்படியாக தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் பெரிய வேகத்தடை இருந்தால் அவற்றை அகற்றிவிட்டோ அல்லது அதன் அளவை மாற்றியோ தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும்.
அதன்படி பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் இடையூறாக இருந்த வேகத்தடையைச் சரிசெய்துள்ளோம். அடுத்த 10 நாள்களில் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து 10 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் தங்களது பயணத்தை தொடங்கும் என்றனா் போக்குவரத்துக் கழக அலுவலா்கள்.