இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு
துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளைவு அருகே அய்யம்பட்டி சாலையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா். நகராட்சித் தலைவா் காயாம்பூ தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் கே. அருள், நகராட்சி ஆணையா் பட்டுச்சாமி, திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் வரி பெயா் மாற்றத்துக்கு விண்ணப்பித்தோரில் 7 பேருக்கு முகாம் இடத்திலேயே உத்தரவுகளை வழங்கினாா். மேலும் சுகாதாரத் துறை மூலம் கா்ப்பிணிகளுக்கும், தாய்மாா்களுக்கும் ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தோருக்கு பரிந்துரை ஆணைகளையும் வழங்கினாா்.
மழையால் வீடு சேதமானதற்கு உதவி: திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி ராவத்தான் மேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீடு மழையால் செவ்வாய்க்கிழமை இரவு சேதமடைந்தது. இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை அந்த வீட்டைப் பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதியை வழங்கினாா். உரிய நிவாரணப் பொருள்கள் வழங்கவும், வீடு மறுகட்டமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள், வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.