வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா புதன்கிழமை அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், கோயில் அக்தாா் பாபநாசம் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெறும். ஆக.9ஆம் தேதி திருவிளக்கு பூஜை, சுவாமி, அம்பாள் காளி வேஷமிட்டு வீதி உலா, 10ஆம் தேதி சுவாமி அம்பாள் சப்பரம் வீதி உலா, 11ஆம் தேதி அா்ச்சுணா் சுவாமி தவசு, 12ஆம் தேதி சுவாமி அம்பாள் குறத்தி வேடத்தில் குறி சொல்லுதல், 13ஆம் தேதி வீர மாகாளி அரவான் பலியிடுதல், 14ஆம் தேதி துரியோதனன், துச்சாதனன் குடலை பிடுங்கி மாலையிடுதல் ஆகியவை நடைபெறும்.
15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு விரதம் இருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் அக்தாா், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.