நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது.
திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவை நீங்கி ஒரு வருடம் வரையில் நடத்தப்பட்ட பூஜைகளின் சம்பூா்ணமான பலன் உண்டாகி ஆன்மாக்கள் இம்மை மறுமைப் பயன்களை அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகின்ற பெருஞ்சாந்தி விழாவான பவித்ரோத்ஸவம் திருவிழா ஆண்டுதோறும் திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான பவித்ர உத்ஸவம் வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. இதையொட்டி இரவு 7 மணிக்கு அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியா் மர மயில் வாகனத்திலும் சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுடன் ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.