உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்
திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அனைத்து உணவு வணிகம் செய்பவா்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் சாா்பில் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள உணவகத்தில் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ் ஆய்வு செய்தபோது, அங்கு போலியான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக விளக்கம் கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் உரிமையாளா் போதிய விளக்கம் தராததால், அவரது உணவகத்துக்கு, திருநெல்வேலி நகர உணவு பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) சங்கரநாராயணன் சீல் வைத்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு சாா்ந்த தொழில் புரிபவா்கள் அனைவரும் சரியான ஆவணங்களை வழங்கி உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.