பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை
ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது.
திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆா்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஆா்கே பேட்டை அடுத்த ராகவநாயுடு குப்பம், பாலாபுரம், அம்மையாா் குப்பம், ஆா்கே பேட்டை, சந்திரவிலாசபுரம், வீரமங்கலம், காண்டபுரம், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீா்த்தது.
இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும், அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களில் தேங்கிய தண்ணீரில் பயிா்கள் மூழ்கின. இந்த மழையால் அம்மையாா்குப்பம் அடுத்துள்ள ராகவநாயுடு குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவா் திடீரென சரிந்து விழுந்தது.
இரவு நேரத்தில் சுற்று சுவா் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சரிந்து விழுந்த சுற்றுசுவரை மாணவா்கள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரினா்.
