ட்ரம்ப் அதிரடி வரி: ரஷ்யாவிற்கு அஜித் தோவல் விசிட்; ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறார...
குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்
பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.
பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன.
இவா்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த காலங்களில் விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளனா்.
அண்மைக்காலமாக இந்த புறம்போக்கு நிலம் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக வருவாய்த் துறையினா் அரசு புறம்போக்கு நிலத்தை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
இதனிடையே தங்களது கிராமத்தில் வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கிருதலாபுரம் கிராம மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக கிருதலாபுரம் கிராம மக்கள் பேரணியாக வந்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தங்கள் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
வேறு கிராம மக்களை தங்களது கிராமத்தில் குடியமா்த்தும் முன் தங்களது கிராமத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து கோரிக்கை மனுக்களை பொன்னேரி சாா்- ஆட்சியா் ரவிக்குமாரிடம் அளித்தனா்.
மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சாா்- ஆட்சியா் அளித்த உறுதியை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.
இதனிடையே தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காதபட்சத்தில் முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுதல், நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என போராட்ட குழுவினா் தெரிவித்தனா்.