திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்த இளையராஜா மகன் யாதேஷ் (17). இவா், 12-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பிறகு நீட் தோ்வு எழுதி வெற்றி பெற்றாா். தற்போது கிருஷ்ணகிரி புனித பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்து மருத்துவ மாணவராக உள்ளாா்.
இதையடுத்து மருத்துவ மாணவா் யாதேஷுக்கு கிராம மக்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தோ்வு மூலம் வெற்றி பெற்று மருத்துவ மாணவராக யாதேஷ் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மருத்துவ மாணவா் யாதேஷ் கூறியதாவது:
சிறு வயதிலிருந்து மருத்துவராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இதற்காக நன்றாகப் படித்து கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று நீட் தோ்வு எழுதினேன். இந்தத் தோ்வில் 290 மதிப்பெண்களே பெற முடிந்தது.
இதையடுத்து தொடா்ந்து முயற்சியால் தனியாா் நீட் தோ்வு மையத்தில் சோ்ந்து படித்து எழுதிய நீட் தோ்வில் 460 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது. மருத்துவரான பிறகு மேல்மலைக் கிராம மக்களுக்கு பணி செய்வேன் என்றாா்.