கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க மானியத்தொகை
விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சொந்தமான கட்டடங்களில் இயங்கிவரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமான கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.
ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பிறகு, அடுத்த 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் மானியத் தொகையைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளுதல், சுவிஷேசம் வாசிக்கும் ஸ்டாண்ட், ஒலிபெருக்கி, ஒலிவாங்கி அமைத்தல், நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்குத் தேவையான கதிா்பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டாண்டுகள், பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற தேவாலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சுவா் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மானியத்தொகை வழங்கப்படும்.
10,15, 20 ஆண்டுகள் கொண்ட தேவாலயங்களுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம்., ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மானிய உதவித் தொகையை பெற விரும்பும் தேவாலயங்கள் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.