`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல...
"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம்
திமுக ஆட்சியில் நடந்த 19 போலி மோதல் சம்பவங்களில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தியாகு ஒருங்கிணைப்பாளராகவும், மீ.த.பாண்டியன் செயலாளராகவும், ஹென்றி திபேன் ஆலோசகராகவும் உள்ள 'காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு' வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மடத்துகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா மூங்கில்தொழுவு பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தியும் அவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டியன் ஆகியோர் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர்.
கடந்த 5 ஆம் தேதி இரவு மூர்த்திக்கும் இரு மகன்களுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதைக்கேட்டு அருகிலிருந்த தோட்டத்தினர் காவல்துறைக்குத் தகவல் கூறியுள்ளனர். தகவல் கிடைத்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலும், சிறப்புக் காவல்படை காவலர் அழகுராஜாவும் அங்குச் சென்று சண்டையைத் தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டியதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். கொடூரமாக நடந்த இக்கொலை சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பும் ஆற்றுப்படுத்தும் பணியையும் தமிழக அரசு உடனே செய்யவேண்டும்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொல்லப்பட்டதை எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், கொலை செய்ததாகச் சொல்லப்படும் மணிகண்டன் என்பவர் 6 ஆம் தேதி காலை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஆனால், நீதிமன்ற நடுவர் இந்த வழக்கு எனது எல்லைக்குள் வராது எனக்கூறி சரண்டர் மனுவை வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதன் பிறகு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சரண்டராகியுள்ளார். குற்றத்தில் ஈடுபட்டவர் தானாக முன் வந்து சரண்டரான நிலையில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது காவல்துறையின் சட்ட கடமையாகும். ஆனால், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்தவர்களை விட்டுவிடுவோமா என்ற பழிவாங்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகச் செயல்படுவது சரியா?
விசாரணைக்குக் கொண்டு செல்லும்போது தாக்க முயன்றதால் துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டோம் என்று வழக்கமான பொய்க்கதையைச் சொல்லி போலி மோதல் மூலம் மணிகண்டனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 19 போலி மோதல் சம்பவங்களை நடத்தி மணிகண்டன் உள்ளிட்ட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திருப்பூரில் இருக்கும்போது மணிகண்டன் போலி மோதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். இதன் மூலம் நடந்துள்ள என்கவுண்டர் உயர் காவல்துறை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளது என்று சந்தேகப்படுகிறோம்.
இந்தப் போக்கு மிகவும் ஆபத்தான மனித உரிமை மீறலாகும். காவல்துறை சார்ந்தவர்களை அல்லது நமது சமூகத்தில் கொடூர சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் கடமையாகும். சம்பவங்களில் நமது சொந்த விருப்பு வெறுப்புகளை முன் வைத்துச் செயல்படுவது சட்டவிரோதமாகும்.

இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்களை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கையும் போலி மோதல் மூலம் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் வழக்கையும் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.