`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?...
US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பதில் என்ன?
அதற்கு அவர், "அமெரிக்க அதிபர் வர்த்தக பற்றாக்குறை மற்றும் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து எங்களுடைய கருத்துகளைத் தெளிவாக கூறிவிட்டார்.
அதற்காக அவர் நேரடியாக இந்தியா மீது எடுத்த நடவடிக்கை எடுத்ததைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தியா எங்களுடைய முக்கியமான கூட்டாளி. அதனால், அவர்களிடம் முழுமையான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். அது தொடரும்." என்று பதிலளித்துள்ளார்.

வரியின் பின்னணி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா மீது 25 சதவிகித வரியையும், ரஷ்யா உடன் வணிகம் செய்வதற்காக அபராதத்தையும் விதித்திருந்தார்.
ஆனால், தற்போது 25 சதவிகித வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி உள்ளார். இதற்கு இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான், இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று டாமி பிகாட் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வரி விகிதம் குறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.