J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்க...
உ.பி: "கங்கை ஆசீர்வதிக்க வீட்டுக்கு வந்திருக்கிறது" - வெள்ளம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனை நதிகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடியிருக்கும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது.
இந்த நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற உத்தரப்பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் கூடியிருந்த பெண்கள் குழுவிடம் அமைச்சர் சஞ்சய் நிஷாந்த், ``எதற்காகப் பயப்படுகிறீர்கள். கங்கை மாதா நதியாக உங்கள் கால்களைக் கழுவி சுத்தம் செய்ய உங்கள் வீட்டுக்கே வந்திருக்கிறாள். உங்களுக்கு கங்கை மாதாவின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. நீங்கள் நேரடியாக சொர்க்கம் செல்வீர்கள்" என்றார்.
அதற்குக் கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், ``கங்கையின் ஆசியை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்" எனப் பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சர் சஞ்சய் நிஷாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பாவத்தைப் போக்குவதற்காக கங்கை நதியை நோக்கி வருகிறார்கள். இங்கே கங்கா அவர்களின் வீட்டுக்கே வந்திருப்பது அற்புதமான உணர்வு என்றேன்.
எங்கள் வாழ்க்கையும், வாழ்வாதார ஆதாரமும் நதிகள்தான். நாங்கள் நதிகளை வணங்குகிறோம். எனவே என் கருத்துக்கு உள்ளூர் மத நம்பிக்கைகளின் பின்னணியும் உள்ளது" என விளக்கமளித்தார்.

ஆனால், இவரின் கருத்து பொதுமக்களிடமிருந்தும், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங், ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலையை அவர் உணரவே இல்லை.
அமைச்சர்கள் எங்குப் புகைப்படம் எடுக்கலாம் என இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற அறிக்கைகள் உத்தரப்பிரதேசத்தின் கள யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.