டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
வேங்கைவயலில் பதற்றம்: போலீசார் குவிப்பு
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேங்கைவயலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் முரளி ராஜா, சுதா்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று போ் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா். பட்டியல் சமூகத்தினா் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிா்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, இந்த குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தமிழக அரசே முன்வர வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?: வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கை திசைதிருப்புவதாகவும், வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக விசிக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், வேங்கைவயல் கிராம பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கைவயலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சனிக்கிழமை காலை முதல் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் உள்பட வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டியலின மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு தற்கொலையில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.