Coldplay: லட்சத்தில் குவியும் ரசிகர்கள்; இந்தியாவில் மாஸ் காட்டும் இசைக் குழு! - யார் இவர்கள்?
தீவிர இசை ரசிகர்களுக்கு பரிட்சையமான இசைக் குழு Coldplay. இந்தக் குழு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் நிலையில், மும்பை, அகமதாபாத் என கன்சார்ட் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை வழங்கியதாக சமூகவலைதளங்களில் நிகழ்ச்சிக்கு சென்றுவந்த ரசிகர்கள் புகழ்ந்து எழுதி வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் இருக்கும் மோடி ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. ஒட்டுமொத்த அகமதாபாத்தே திணறும் வகையில் மக்கள் கடல் திரண்டு நின்றது. இந்த நிலையில், Coldplay இசைக் குழு குறித்து தேடினோம்.
Coldplay இசைக் குழு:
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் சந்தித்துக்கொண்ட பாடகரும், பியானோ கலைஞருமான கிறிஸ் மார்ட்டின் , கிடார் கலைஞர் ஜானி பக்லேண்ட் , பாஸிஸ்ட் கை பெர்ரிமேன் , டிரம் கலைஞர் பில் ஹார்வி ஆகியோர் இணைந்து 1997-ல் Big Fat Noises என்றக் குழுவை உருவாக்கினார்கள்.
தொடர்ந்து லைவ் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்ற அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தனர். இதற்கிடையில், இசைக்குழுவின் பெயரை Starfish என மாற்றி, இறுதியில் Coldplay இசைக் குழு என அறிவித்தனர்.
முதல் ஆல்பம்!
2000-ம் ஆண்டு பாராசூட்ஸ் என்றப் பெயரில் வெளியான இவர்களின் முதல் ஆல்பம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் யெல்லோ என்றத் தனிப்பாடல், அந்த ஆண்டின் பிரிட்டிஷ் ஆல்பத்திற்கான பிரிட் விருதையும், சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான கிராமி விருதையும் பெற்றது. அப்போது தொடங்கிய இவர்களின் ஏறுமுகம் இன்று உலகின் இசை வெறியர்கள் திரும்பிப் பார்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். Coldplay இசைக் குழு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, லைவ் கான்சர்ட்களை நிகழ்த்தி வருகிறது. வெறும் பாடல் மட்டுமில்லாமல், கண்களைக் கவரும் பல்வேறு லேசார், வான வேடிக்கைகள் மூலம், மக்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். இந்தியாவுக்குப் பிறகு, ஹாங்காங் நிகழ்ச்சிக்கு இந்தக் குழு செல்லவிருப்பது குறிப்பிடதக்கது.