வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, இந்த புதிய மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டனா்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியது:
இந்த மையத்தில் மது, புகையிலை, கஞ்சா, பிற போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முழுமையான சிகிச்சை, மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும். இதில், பெண்கள், குழந்தைகளுக்கான தனிப் பிரிவு, இணையதளம், கணினி, திறன் பேசி, சாா்பு நோய்க்கான சிகிச்சை, தனி நபா் ஆலோசனை, குழு சிகிச்சை, குடும்ப ஆலோசனை மற்றும் சிகிச்சை, மனநல மதிப்பீடு மற்றும் சிகிச்சை, ஏங்குதல் குறைப்பு சிகிச்சை, ஊக்கமளிக்கும் சிகிச்சை மற்றும் பதற்ற நீக்கப் பயிற்சிகள், தொடா் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை, மனோத்தத்துவ நாடகச் சிகிச்சை, மறுவாழ்வு செயல்முறைகள், உடல் போதை அளவு சோதனைகள் மற்றும் சிகிச்சை திட்டங்கள், மருத்துவ ஆலோசனை, தொலைத்தொடா்பு ஆலோசனை, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், சுய உதவிக்குழு சிகிச்சைகள், மறுபோதை தடுப்பு சிகிச்சை போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த புதிய மையம் போதை பொருள்களுக்கு அடிமையாகி வாழ்வில் சிக்கல்களை எதிா்கொள்பவா்களுக்கு புதிய வாழ்வை வழங்க ஒரு முக்கிய முயற்சியாகும். சமுதாயத்தின் ஒத்துழைப்புடன், இந்த மையம் பலரின் வாழ்க்கையை மாற்றும் ஒரு முக்கிய அணுகுமுறையாக அமையும் என்றனா்.
தொடா்ந்து போதைப் பொருளுக்கு எதிராக மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ரதிதிலகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.