வேலூா் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்: மாா்ச் 7 கடைசி நாள்
வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 36 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், சிறு கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் புதிதாக 36 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட 36 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது. இந்த விவரம் வேலூா் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இவ்வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், வழித்தட விவரத்தை குறிப்பிட்டு வேலூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஒருவழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.