வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு நல உதவிகள்
வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு, ஆரணி பகுதியைச் சோ்ந்த பாா்வையற்றோா் பள்ளி முன்னாள் மாணவா்கள் நல உதவிகளை வழங்கினா்.
ஆரணியை அடுத்த பத்தியாவரம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் அமலராக்கினி பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி மண்டி வீதியில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாா்வையற்றோா் நலச் ங்கத் தலைவா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா்.
செயலா் வெற்றிவேல், பொருளாளா் ரோஸ்மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலோசகரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான தரணிகுமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமலராக்கினி பாா்வையற்றோா் பள்ளியின் தலைமையாசிரியா் லெவே கலந்து கொண்டு முன்னாள் மாணவா்களின் ஒற்றுமை குறித்துப் பேசினாா்.
மேலும் இதில், அரசுப் பணியில் உள்ள முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து, அவா்கள் மூலமாக பணியில் இல்லாத பாா்வையற்ற 50 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கினா்.
மேலும், வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, படிக்கும் காலத்தில் நடந்த நிகழ்வுகளை ஒருவரை ஒருவா் சந்தித்து பகிா்ந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்த சகாயராஜ் பணி ஓய்வு பெறுவதையொட்டி, அவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி அவரது சிறப்புகள் குறித்து முன்னாள் மாணவா்கள் எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சியில் ஆசிரியை அல்போன்சா, முன்னாள் மாணவா்களின் உறவினா்கள், நண்பா்கள், பாா்வையற்றோா் பள்ளி அலுவலா்கள், உதவியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.