ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்...
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300 -ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400 -ம், பட்டதாரிகளுக்கு (பி.இ.போன்ற தொழில்சாா் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 -ம் என வேலைவாய்ப்பற்றோருக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாா்களின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தொடா்ந்து, பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 -க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதியுடையோா் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உதவித்தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றாா் அவா்.