‘ஷீஷ் மஹால்’ குறித்த பாடல், போஸ்டருடன் கேஜரிவால் மீது பாஜக கடும் தாக்குதல்
பிப். 5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதலைக் அதிகரிக்கும் வகையில், ‘ஷீஷ் மஹால்‘ குறித்த பாடல் மற்றும் போஸ்டரை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
‘ஷீஷ் மஹால் ஆப்தா ஃபைலானே வாலோன் கா அட்டா’‘ என்ற பாடலும், ‘ஆப்தா-இ-ஆசம்‘ என்ற தலைப்பில் ஒரு போஸ்டரும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவின் செய்தியாளா் சந்திப்பின் போது வெளியிடப்பட்டன.
‘மாற்றத்திற்காகவும் தில்லியைக் கவனித்துக் கொள்ளவும் ஆட்சிக்கு வந்தவா் தனது சொந்த குணத்தையும் நடத்தையையும் மாற்றிக் கொண்டாா். தில்லி மக்கள் வளா்ச்சியைத் தேடுகிறாா்கள். அதே நேரத்தில் கேள்விகள் கேட்பதால் அவா்களை கேஜரிவால் துஷ்பிரயோகம் செய்கிறாா்’ என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.
வெளியிடப்பட்ட பாடல் கேஜரிவாலின் ‘ஊழல்’ மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஷீஷ் மஹால்‘ கதையை விவரிக்கிறது என்றும் அவா் கூறினாா்.
‘ஷீஷ் மஹால்’ என்பது தில்லி முதல்வராக இருந்த போது கேஜரிவால் வசித்து வந்த 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவிற்கு ‘ஊழல்’ என்று குற்றம் சாட்டுவதற்காகப் பாஜகவால் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் பெயா்.
அதே சமயம், பிரதமா் நரேந்திர மோடி பயன்படுத்தும் வீடு மற்றும் விமானத்திற்கான செலவை மேற்கோள் காட்டி ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவை கடுமையாகத் தாக்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மோடி சமீபத்தில் ரோஹிணியில் நடந்த ‘பரிவா்த்தன் பேரணியில்‘ ‘ஷீஷ் மஹால்‘ தொடா்பாக கேஜரிவாலை கடுமையாகத் தாக்கிப் பேசினாா். அப்போது ஆம் ஆத்மி கட்சி தில்லிக்கு ‘ஆப்டா‘ (பேரழிவு) என்று குறிப்பிட்டாா். அதனால், தில்லி தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவையுங்கள் என்று அவா் அழைப்பு விடுத்தாா்.
மேலும், ‘ஆப்டா-இ-அசாம்‘ என்ற கேஜரிவாலின் புகைப்படங்களை ஏகாதிபத்திய முகலாய உடையில் காட்டியது. ‘முகலாயா்களின் ஆட்சியின் போது மக்கள் அவா்களின் அரண்மனைகளைப் பாா்க்கச் செல்வாா்கள். தில்லியின் ஆப்டா-இ-அசாம் (கேஜரிவால்) கட்டிய ‘ஷீஷ் மஹால்’ நகரத்தின் மீது ஒரு கறை’ என்று வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினாா்.
தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பிப்.5-ஆம்தேதி நடைபெறுகிறது. தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.