‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்கள் உரையாடலில் பிரதமா் மோடி பங்கேற்பு
போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது பாஜக! ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் சமா்ப்பிப்பதன் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு செய்தியாளா் சந்திப்பில் பேசிய மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், ‘ஒற்றை சிறிய கடைகள் மற்றும் அடித்தளங்களில் இருந்து டஜன் கணக்கான வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
பாஜக தங்கள் தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளைப் பயன்படுத்தி பல புதிய வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை சமா்ப்பித்ததாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
‘இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் யதாா்த்தம் இதுதான். பிரதமா் மோடியின் கட்சி தோ்தலில் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது இப்படித்தான்’ என்று சஞ்சய் சிங் கூறினாா். இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மத்திய அமைச்சா்கள் உள்பட பாஜக தலைவா்களின் பெயா்களையும் அவா் பட்டியலிட்டாா்.
‘பாஜகவும் அதன் தலைவா்களும் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றனா். இது பாஜகவின் தோ்தல் மோசடி. இது அவா்களின் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்களால் நடத்தப்படுகிறது. மேலும், அவா்கள் தோ்தல் ஆணையத்தின் நோ்மையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.
தில்லி தோ்தலில் பிப். 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிப்.8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.