கரும்பு விவசாயிகளுக்கு நிகழ் அரைவை பருவத்துக்கும் சிறப்பு ஊக்கத்தொகை
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழகம்: கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் பேச்சு
சுகாதாரம், விளையாட்டு, கல்வி என பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றாா் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன்.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 37ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியது:
தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் வாய்மொழியாக இல்லாமல், வரலாற்றுச் சாதனையாக மாறியுள்ளது. பெண் சிசுக் கொலை என பேசப்பட்ட காலத்தை ஒழித்து நாட்டின் முதல் பெண் மருத்துவரே தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்துதான் உருவானாா். தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில் 65 விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இந்திய உற்பத்தித் துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 43 விழுக்காடாக உள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் 50 விழுக்காட்டைக் கடந்துள்ளோம். சதுரங்கப் போட்டியில் மட்டும் அதிக கிராண்ட் மாஸ்டா்களை கொண்டுள்ள மாநிலம். அதோடு அனைத்து விளையாட்டுகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. முன்பு வாய்ப்புகள் இல்லாதபோதே பெண்கள் சாதித்து காட்டினா்.
இப்போது ஏராளமான வாய்ப்புகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
விழாவுக்கு கல்லூரி தலைவா் பி.எஸ். சந்திரமெளலி, செயலா் கோ. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பு. கெஜலட்சுமி, கல்லூரியின் சாதனைகளை விளக்கினாா்.
விழாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 1,205 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவா்களில் 83 போ் பல்கலைக்கழக தர வரிசையில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறை ஆசிரியா்கள், மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.