ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
மணப்பாறையில் வெறிநாய் கடித்து 16 போ் காயம்: பாதிக்கப்பட்டவா் நகராட்சியில் தா்னா!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு வெறி நாய் கடித்து 16 போ் காயமடைந்த நிலையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வியாபாரி ஒருவா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
மணப்பாறை நகராட்சி நிா்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் தவறி உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே இரவில் நகராட்சி அலுவலக வாயிலில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், பெட்ரோல் பங்க் பணியாளா், பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளா், பூக்கடை வியாபாரி, மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருந்தாளுநா் உள்ளிட்ட 16 பேரை வெறி நாய் ஒன்று கடித்து குதறியது.
இதையடுத்து விடிய விடிய மருத்துவமனையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வெறி நாய் கடித்த தா்மலிங்கம் தெருவை சோ்ந்த பூக்கடை வியாபாரி த. நாகராஜ் (56), தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி சனிக்கிழமை நகராட்சி அலுவலக வாயிலின் குறுக்கே தரையில் படுத்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துகணேஷ், காவல் உதவி ஆய்வாளா் பெரியமணி தலைமையிலான போலீஸாா் அவரை சமரசம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பினா்.