ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனை
ஸ்கேன் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் கருவின் தன்மையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தோ்வை தடை செய்தல்) சட்டம் சட்டத்தின்கீழ் அண்மையில் சம்பந்தப்பட்ட குழுவினா், காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை மகப்பேறு துறை தலைமை மருத்துவ அதிகாரி லட்சுமி சுகுமாரன், குழந்தைகள் துறை தலைமை மருத்துவ அதிகாரி (பொ) அபா்ணா, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் கோ. குலசேகரன் மற்றும் விபெட்ஸ் உதவி ஒருங்கிணைப்பாளா் ஜீவா ஆகியோா் கலந்துகொண்டனா்.
கடந்த வாரம் காரைக்காலில் உள்ள ஸ்கேன் மையங்களில் குழுவினா் நடத்தி ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காரைக்காலில் மாா்வா ஸ்பெஷாலிட்டி மையத்தில் ஸ்கேன் வசதி புதிதாக தொடங்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காரைக்காலில் 17 ஸ்கேன் மையங்கள் உள்ளன. ஸ்கேன் மையங்கள் நடத்துவோருக்கு சட்ட விதிகளின் படி நடத்த வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்பவா்கள் பாலினைத்தைக் கூறுவது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவா்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். காரைக்காலில் உள்ள அனைத்து ஸ்கேன் மையங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக துணை இயக்குநா் தெரிவித்தாா்.